தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன் சதய விழா கோலாகல கொண்டாட்டம்
தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் மாமன்னன் இராசராச சோழனின் 1039-வது ஆண்டு சதய விழாவில் தமிழக அரசின் சார்பில் மாமன்னன் இராசராச சோழன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் மாமன்னன் இராசராச சோழன் அவர்களின் 1039-வது ஆண்டு சதய விழாவில், தமிழ்நாடு அரசின் சார்பில் மாமன்னன் இராசராச சோழன் திருவுருவச் சிலைக்கு கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் இன்று (10.11.2024) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாமன்னன் இராசராச சோழன் அவர்களின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் அரசு விழாவாக சென்ற ஆண்டு முதல் சதய விழா கொண்டாடப்படும் என முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பானது தஞ்சை மாவட்டத்திற்கு மேலும் ஒரு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. திருமகள் போலப் பெருநிலச் செல்வி யுந்தனக்கே உரிமை பூண்ட பெருமன்னன் இராசராசன் கி.பி.985-இல் சோழப் பெருமன்னனாக அரியணையில் அமர்ந்தான். அழகிலும், அறிவிலும், ஆற்றலிலும், சிறந்து விளங்கிய இப்பெருமன்னன் இராசகேசரி என்ற பட்டம் பூண்டு கி.பி.1014 வரை ஆட்சி புரிந்து தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்தனன். தந்தை வழியில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவரான செம்பியர் குடியிலும் தாய் வழியில் சங்க காலத்திலிருந்து சிறந்த திருமுடிக்காரி போன்ற பெருந்தகை பிறந்த மலையமான் குடியையும் சேர்ந்த இப்பெருமகனின் இயற்பெயர் அருண்மொழிவர்மன் என்பதாகும். உலகமே வியக்கும் இராசராசேச்சுரம் என்றும் தஞ்சைப் பெருவுடையர் திருக்கோயிலை எடுத்த சிவபாதசேகரனாம் இப்பெருமன்னன் வைணவம், சமணம், பௌத்தம் போன்ற எல்லா சமயங்களுக்கும் ஆக்கம் அளித்து சமநோக்கோடு வாழ்ந்து காட்டியவன் தில்லையில் செல்லரித்த நிலையில் மூடிக்கிடந்த மூவர் தேவாரப் பாக்களை நம்பியாண்டார் நம்பியின் துணை கொண்டு மீட்டு எல்லாக் கோயில்களிலும் தேவாரம் ஓதச் செய்ததோடு, சைவ ஆகமங்கள் எனப் போற்றப் பெறும் திருமுறைகளைத் தொகுத்து அளித்த பெருமகனும் இராசராச சோழனே. ஐப்பசிச்சதய நாளில் பிறந்த பெருந்தகையாளன் என்பதைக் கல்வெட்டுக்கள் பறைசாற்றுகின்றன. சேரநாட்டை இராசராசன் வெற்றி கண்டபோது, அங்கு சதய நாளில் திருவிழாக் கொண்டாட செய்தான் என்பதைக் கலிங்கத்துப்பரணி. "சதயநாள் விழா உதியர் மண்டலம் தன்னில் வைத்தவன்" என்று கூறுகிறது. இத்தகைய பெருமைக்குரிய பெருமன்னனின் சதயப்பெருவிழா அம்மன்னன் முடி சூடிய 1039-ஆவது ஆண்டான 2024 நவம்பர் 10 ஆம் தேதி இன்று கொண்டாடும் வண்ணம் தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலில் சதயவிழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார். முன்னதாக தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் மாமன்னன் இராசராச சோழனின் 1039 ஆம் ஆண்டு சதயவிழாவினை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம், திறந்து வைத்து பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். இராமநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், சதய விழாக் குழுத்தலைவர் து.செல்வம் , பரம்பரை அறங்காவலர் இராஜா ஸ்ரீ பாபாஜி ராஜா போன்ஸ்லே, துணைத் தலைவர் எஸ்.சந்திரசேகர மேத்தா, தருமபுர ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் கண்ணன் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தரெ.மதியழகன், இந்து சமய அறநிலைதுறை உதவி ஆணையர் கவிதா, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.