வாடகை கடைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.ட் வர்த்தக சங்கம் பேரவை கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: கடை வாடகை தொகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கும் மத்திய அரசை கண்டித்தும், சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த வரிவிதிப்பை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில் வணிகர் சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வணிகர் சங்க பேரவை நிறுவனர் தலைவர் ராஜா சீனிவாசன் தலைமை வகித்தார். செய்தி தொடர்பாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அப்துல் நசீர், மாவட்ட பொருளாளர் ராஜா, நகர தலைவர் சதீஷ், அவைத்தலைவர் ஜெயபால், நகர செயலாளர் அப்துல்லா, துணைத் தலைவர் முகமது மசூத், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த செப்.23ம் தேதி நடைபெற்றதில், புதிதாக கடை வாடகைக்கு 18 சதவீதம் வரி விதித்துள்ளதை ரத்த செய்ய வேண்டும். இந்த நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஜிஎஸ்டி விதிகளின்படி சொந்த இடத்தில் வணிகம் நடத்தும் பெரும் வர்த்தக நிறுவனங்கள் (கார்ப்பரேட்) இந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரியை செலுத்த தேவையில்லை. சொந்த இடம் வாங்க வசதி இல்லாத வாடகை இடத்தில் கடை நடத்திடும், ஒவ்வொரு சிறு வணிகரும் கடைக்கு செலுத்தும் வாடகை தொகையில் 18 சதவீதம் மாதந்தோறும் அரசுக்கு வரியாக செலுத்தியாக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அரசின் நிலைப்பாட்டை விளக்க வேண்டும். இந்த வரி விதிப்பு அறிவிப்பு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக எடுக்கப்பட்ட முடிவு. இது சில்லரை வணிகத்தை அழிக்க முயற்சிக்கும் சதியாகும். உடனடியாக மத்திய அரசு இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சியினரும் குரல் கொடுக்க வேண்டும். இந்த வரி விதிப்பை முழுமையாக நீக்க வேண்டும். இந்த வரி விதிப்பை கடுமையாக எதிர்க்கிறோம். இதனுடைய எதிரொலி கண்டிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். ஒவ்வொரு குடிமகனும் தாங்கள் வாங்குகிற பொருட்கள் மூலமாக எவ்வளவு சுரண்டப்படுகிறார்கள் என்பது குறித்து விரைவில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு இயக்கங்களை நடத்தி தெளிவுப்படுத்துவதற்காக ஒரு இயக்கத்தை நடத்துவது. விரைவில் மாநில அளவில் சுற்றுப்பயணம் செய்து வணிகர்கள் சங்கங்களை ஒன்று திரட்டி சென்னையில் போராட்டம் நடத்தி கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்வது. இரவு நேரத்திலும் கடைகளை நடத்தலாம் என மாநில அரசு உத்தரவு இருந்தாலும் போலீசார் பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்ற காரணம் கூறி கடைகளை பத்தரை மணிக்கு மூட வேண்டும் என வியாபாரிகளை துன்புறுத்துவது வேதனை அளிப்பதாக இருக்கிறது. இதை காவல்துறையினர் மாற்றிக் கொள்ள வேண்டும் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், ஏஐடியூசி சம்மேளன மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். துணை பொருப்பாளர் எஸ்.கே.வடிவேலு நன்றி கூறினார்.