தொகுதி மறுவரையறை சட்ட நகலை எரித்து தஞ்சையில் திமுகவினர் போராட்டம்
தஞ்சாவூர்: தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் சட்ட நகலை எரித்து தி.மு.க.வினர் போராட்டம். தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் மற்றும் மசோதா சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்துவோம் என்று தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு தி.மு.க சார்பில் போராட்டம் நடைபெற்றது. தொகுதி மறு வரையறை போராட்டத்தில் தி.மு.க உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, செல்வம், தி.மு.க மாநகர செயலாளரும் தஞ்சை சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான சண் ராமநாதன், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொகுதி மறுவரையறை சட்ட மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதுபோல் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதியில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .