Welcome To weekly News Paper Delta
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன தானியங்கி பரிசோதனை கருவி கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
64 Views

தஞ்சாவூர்: தேசிய சுகாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுண்ணுயிரியல் துறை ஆய்வகத்திற்கு மூன்று நவீன தானியங்கி பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை கருவிகளின் துவக்க விழா தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (சிறப்பு பணி அலுவலர்) பேராசிரியர் ஆர்.பாலாஜிநாதன் தலைமையில் நடைபெற்ற துவக்கவிழாவில் கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசோதனை கருவிகளை துவக்கி வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இரத்தத்திலுள்ள கிருமிகளை கண்டறிய உதவும் தானியங்கி இரத்த மாதிரி கிருமி பரிசோதனை கருவி ரூ.11,96,930/- மதிப்பிலும், கிருமிகளை வகைபடுத்துதல் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு திறனை கண்டறிய உதவும் வைடெக் 2 என்ற கருவி ரூ.16,12,700/- மதிப்பிலும் நுண்ணுயிரியல் துறை ஆய்வகத்தில் நிறுவப்பட்டுள்ளது. மொத்தத்தில் 50 லட்சம் மதிப்பிலான கருவிகள். தற்போது நடைமுறையில் உள்ள பரிசோதனை முறைகள் மூலம் இரத்ததிலுள்ள பாக்டீரியாக்களை கண்டறிய 4 நாட்களும் பூஞ்சைகளை கண்டறிய 10 நாட்களும் காத்திருக்க வேண்டும். இந்த நவீன தானியங்கி கருவியின் பயன்பாட்டால் இரத்தத்திலுள்ள பாக்டீரியாக்களை 24 மணி நேரத்திற்குள்ளும், பூஞ்சைகளை 48 மணி நேரத்திற்குள்ளும் கண்டறியலாம். மேலும் இந்த கருவிகளின் மூலம் ஒரே நேரத்தில் 30 முதல் 60 இரத்த மாதிரிகளை பரிசோதிக்க முடியும். வெளி ஆய்வகங்களில் ரூ.700- மதிப்பில் செய்யப்பட்டு வரும் இந்த இரத்த பரிசோதனைகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் முற்றிலும் இலவசமாக செய்யபடுகிறது. இந்த நவீன தானியங்கி பரிசோதனை கருவிகள் மூலம் துரிதமாக பரிசோதனை முடிவுகள் பெறப்படுவதால் நோயாளிகளுக்கு சரியான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு விரைவில் குணமடைவர். மேலும் நோயாளினால் ஏற்படும் இறப்பு விகிதம் பெருமளவு குறையும். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் நுண்ணுயிரியல் துறை தலைவர் மரு. யூனிஸ் ஸ்வர்னா ஜேக்கப், நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் மற்றும் பேராசிரியர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புனர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

.