தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருச்சேறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளை காலி செய்ய கூறி கோயில் செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பி மிரட்டுகிறார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சை கலெக்டரிடம் மனு அளித்தனர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது திருச்சேறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: நாங்கள் திருச்சேறை பகுதியில் மூன்று தலைமுறையாக வசித்து வருகிறோம். இதில் நாங்கள் நாச்சியார்கோயில் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து ஆவணங்கள் மற்றும் வீட்டு தண்ணீர் வரி ரசீது போன்றவையும் உள்ளது. ஒரு சிலருக்கு அரசால் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் புறம்போக்கு இடத்தில் நத்தம் என்ற பகுதியில் இரண்டு மூன்று தலைமுறையாக வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் வீட்டிற்கு பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம். சிலரிடம் பட்டாவும், சிலர் விழிப்புணர்வு இல்லாததால் பட்டா இல்லாமல் பதிவு மட்டும் செய்துள்ளனர். இந்நிலையில் திருச்சேறை சாரநாத பெருமாள் கோயில் செயல் அலுவலர் அய்யப்பன் திருச்சேறை மெயின் ரோடு தெற்கு தெரு, திருச்சேறை தெற்கு வீதி, மாரியம்மன் கோவில் தெரு உட்பட பகுதிகளில் கோயில் கணக்காளர் ராஜாவுடன் வந்து ஒவ்வொரு தெருவாக அளந்து ஆவணங்களை தயார் செய்கிரார். கோயில் இடத்தில் நீங்கள் குடியிருக்கிறீர்கள் என்று எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி 13 நாட்களில் இடத்தை காலி செய்து கோயிலிடம் ஒப்படைக்க வேண்டும் என பதிவு தபாலில் நோட்டீஸ் அனுப்பி மிரட்டுகிறார். எங்களுடைய ஆதாரங்களை காட்டுகிறோம் என்று பலமுறை கூறியும் செயல் அலுவலர் அய்யப்பன் அதை ஏற்கவில்லை. எனவே இதுகுறித்து உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் அனைவரையும் மிரட்டும் கோயில் செயல் அலுவலர் மற்றும் கோயில் கணக்கர் ஆகியோர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சேறை கிராமத்தில் பட்டா இல்லாதவர்களுக்கு கருணை அடிப்படையில் பட்டா வழங்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.