தஞ்சை, நவ.12 பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த 2011- 12 கல்வியாண்டு முதல் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 12000 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 355 பகுதி நேர ஆசிரியர்கள் முறையான நியமனத்தில் அரசு பள்ளி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு ரூ. 12500 ஊதியத்தில் நியமிக்கப்பட்டனர். குறைவான ஊதியம் என்ற நிலையிலும் அரசு பள்ளி மாணவர் நலன் கருதி தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். எங்களின் ஒரே கோரிக்கை எங்கள் குடும்ப வாழ்வாதாரத்திற்கு எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான். தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தது நம்பிக்கை அளித்தது. இருப்பினும் இன்னும் இந்த பணி நிரந்தர கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளதால் அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்களின் குடும்பத்தினர் வாழ்வாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக வாயிலில் பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் செல்வன் தலைமையில், மணி முன்னிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் திரளான பகுதிநேர ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் தங்கள் கோரிக்கை மனுவை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் அளித்தனர்.