நேரு யுவ கேந்திரா சார்பில் மாவட்ட இளையோர் திருவிழா கலைப்போட்டி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது
தஞ்சாவூர்: இந்திய அரசின் இளையோர் நலத்துறை சார்பில் 28வது தேசிய இளையோர் திருவிழா வரும் ஜனவரி மாதம் புதுடெல்லியில் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் இளம் கலைஞர்களை தேர்வு செய்யும் வகையில் இந்தியா முழுவதும் 750 மாவட்டங்களில் மாவட்ட இளையோர் கலை விழாக்கள் நடத்தப்படுகின்றன. தஞ்சாவூர் நேரு யுவ கேந்திரா சார்பில், மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா, வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இத்திருவிழாவில் கீழ்க்கண்ட கலைப்போட்டிகளும், நிகழ்ச்சிகளும் நடைபெற்றன, இளையோர் கவிதைப்போட்டி,மொபைல் போட்டோ போட்டி, ஓவியப்போட்டி,பேச்சுப்போட்டி,கிராமிய குழு நடனப்போட்டி,அறிவியல் ஆய்வு தனிநபர் போட்டி. அறிவியல் ஆய்வு குழுப்போட்டி ஆகிய 7 போட்டிகள் காலையில் துவங்கி மாலை வரை நடைபெற்றது. போட்டிகளில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த 15 முதல் 29 வயதுக்குட்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக கல்லூரி பேராசிரியர்களும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களும் செயல்பட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்ச்சியில் மாலையில், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பேராசிரியர் சுகுமாரன் பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கோட்டாச்சியர் இலக்கியா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி கௌரவப்படுத்தி பேசுகையில்,இளையோர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற தங்களுக்கென்று ஒரு குறிக்கோளை மனதில் நிறுத்தி அதனை நிறைவேற்ற உழைக்க வேண்டுமென்று கோட்டாட்சியர் கேட்டுக்கொண்டார், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அனுசுயாப்ரியா, நேரு யுவ கேந்திராவின் மாவட்ட ஆலொசனைக் குழு உறுப்பினர் அருண், ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். போட்டிகளில் நடைபெற்ற வளாகத்தில், தமிழக சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, திட்டங்கள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது இளையோர்களை கவரும் விதத்தில் இருந்தது. முன்னதாக, நேரு யுவ கேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன், வரவேற்றார். நேரு யுவ கேந்தரிராவின் கணக்காளர் பவுன்ராஜ், நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திரா தேசிய இளையோர் தொண்டர்களும், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்களும் இணைந்து செய்திருந்தனர்.