21 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோபுர தரிசனம்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அடுத்து புன்னைநல்லூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் இதுவும் ஒன்று. இங்கு அம்மன் புற்று மண்ணால் ஆனதால் அபிஷேகம் எதுவும் நடைபெறாது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தைலாபிஷேகம் நடைபெறும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு திருப்பணிகள் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 7 ஆம் தேதி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்ற கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழுங்க, வாணவேடிகையுடன் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 40க்கு மேற்பட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர். மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் வட்டாரத்தில் மட்டும் பள்ளி - கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.