தஞ்சை சுற்றுலா வளர்ச்சிக்கு மத்திய அரசு ரூ 25 கோடி ஒதுக்கீடு - பெரிய கோவிலில் பக்தர்கள் வசதிக்கான பணிகள் தொடங்க அனுமதி முரசொலி எம்.பி தகவல்
தஞ்சாவூர்: தஞ்சை சுற்றுலா வளர்ச்சிக்கு மத்திய அரசு ரூ 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது எனவும்,பெரியகோவிலில் பல்வேறு பணிகள் மேற் கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் முரசொலி எம்.பி.தெரிவித்துள்ளார். தஞ்சை ராமநாதன் ரவுண் டானா அருகே உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தஞ்சை பெரியகோவில், அருங்காட்சியகம், பெத் தண்ணன் கலையரங்கம் மற்றும் மாநகரில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் இந்திய தொல்லியல் துறை, சுற்றுலா வளர்ச்சித்துறை, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்று ஆலோசன மேற்கொண்டனர். பின்னர் முரசொலி எம்.பி. நிருபர்களிடம் கூறியதா வது:- மத்திய ரெயில்வே துறை,விளையாட்டுத்துறை, தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை என ஒவ்வொரு துறை மந்திரிகளையும், செயலாளர்களையும் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளேன். தஞ்சை பெரியகோவிலில் பல்வேறு பணிகளை மேற் கொள்ள இந்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. இதனால் தஞ்சை பெரியகோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த உள்ளோம். பெரியகோவிலில் ஏற்கனவே உள்ள கழிவறைகளை புனரமைக்கவும், புதிதாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கவும், புதிதாக கண்காணிப்பு கேமராக்களும், புதர்களை அகற்றவும், இருள் சூழ்ந்த பகுதிகளில் மின் விளக்குகள் அமைக்கவும், நடைபாதையில் தேங்காய் நார் விரிப்பு அமைக்கவும் தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. புதிதாக கழிவறை அமைக்க அனுமதி கேட்க இருக்கிறோம். பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வலம் வரும் பாதையில் கற்களை கொண்டு புதிய பாதை அமைப்பதுடன் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட உள்ளது. மேலும் பெரியகோவிலுக்கு வரும் வாகனங்களை நிறுத்த போதிய வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த இருக்கிறோம். சாலைகள் சீரமைப்பு, ராஜ ராஜன் பூங்காவை மேம்படுத்துதல், அகழி மேட்டை சீரமைத்தல், கழிவறைகள் புதுப்பித்தல், கோவிலின் முன் பகுதியில் பொருட்கள் பாதுகாப்பு அறை, காலணி வைப்பகம், ஏ.டி.எம். மையம். பெத்தண்ணன் கலையரங்கத்தில் ஒலிபெருக்கி அமைத்தல், தஞ்சை அருங்காட்சியகம் புனரமைத்தல், கல்லணைக் கால்வாய் நடைபாதை சீரமைத்தல் போன்ற பணிகளும் நடைபெற உள்ளது.இந்த பணிகள் எல்லாம் மத்திய சுற்றுலா வளர்ச்சித்துறை ஒதுக்கி உள்ள ரூ.25 கோடியில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநகராட்சி ஆணையர் கண்ணன், செயற்பொறியாளர் சேர்மகனி, இந்திய தொல்லியல் துறையின் முதுநிலை பராமரிப்பு அலுவலர் விக்னேஷ், முதுநிலை தோட்ட உதவியாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.