தஞ்சையை சேர்ந்த 2 வயது சிறுமி சாதனை : பரத நாட்டியத்தில் அசத்தல் நடனம்
தஞ்சாவூர்: சின்ன விதைக்குள் ஆலமரமே ஒளிந்துள்ளது. அதுபோல் பரத நாட்டியத்தில் நச்சென்று முத்திரைப்பதித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார் தஞ்சை மாவட்டம் மருங்குளம் கிராமத்தை சேர்ந்த 2 வயது சிறுமி. தஞ்சை மாவட்டம் மருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ். டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதியின் இரண்டு வயது மகள் விதுலா ஸ்ரீ. இந்த சிறுமிதான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். கால்கள் பம்பரமாக சுழல... கைகள் பரத முத்திரைகளை பிசகாமல் பதிக்க திருப்புகழ் பாடலுக்கு அநாயசமாக ஆடி டிவைன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தின் தனது பெயரை வலுவாக பதித்துள்ளார். சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேலக்கோட்டையூரில் உள்ளது விதுலா ஸ்ரீயின் பாட்டி வீடு. இவர்களின் வீட்டுக்கு பக்கத்தில் மேகநாதேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. இங்கு தனது ஒரு வயது குழந்தை விதுலாஸ்ரீயுடன் விஜயலட்சுமி தங்கி இருந்தார். அப்போது. சிறுமியை அவரது பாட்டி அருகில் உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு அழைத்து சென்று உள்ளார். கோயிலில் பரத கலைஞர் மாணவிகளுக்கு பரதம் கற்று தருவதை பார்த்த குழந்தை விதுலா ஸ்ரீ தானாகவே ஆட தொடங்கி உள்ளார். குழந்தையின் தாளத்திற்கு சரியாக ஆடும் திறமையை கண்ட பரதநாட்டிய ஆசிரியை திருப்புகழ் பாடலுக்கு பரதம் ஆட பயிற்சி அளித்துள்ளார். மேலும் பரத முத்திரைகள் மற்றும் சுலோகங்களும் கற்று தந்துள்ளார். பசுமரத்தாணி போல் மனதில் பரத நாட்டிய ஆசிரியை கற்பித்தவற்றை கற்பூரம் போல் பற்றிக் கொண்ட சிறுமி விதுலா ஸ்ரீ தன் திறமையை வெளிக்காட்டி டிவைன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தில் தனது பெயரையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்கத்கது. ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே! கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே! குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே! மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே! என்ற பாடல் ஒலித்தால் போதும் சிறுமி விதுலாஸ்ரீயின் கால்கள் அச்சுரம் பிசகாமல் பரத முத்திரைகளை பதித்து நடனம் ஆடுகிறது. இதுமட்டுமா? மூஷிக வாகனனே, பச்சை வாகனனே போன்ற பக்திப்பாடல்கள் அனைத்திற்கும் பரதம் ஆடி அசத்துகிறார் விதுலாஸ்ரீ. மிகக்குறைந்த வயதில் அருமையாக பரத முத்திரைகளை பிடித்து பரத நாட்டியம் ஆடும் விதுலாஸ்ரீயின் திறமையை நேரில் பார்த்து டிவைன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகம் பாராட்டி விதுலாஸ்ரீயின் பெயரை பதிவு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.