தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் அரிய மருத்துவ சாதனை மூக்கு–மண்டையோட்டு அடிப்பகுதி கட்டிகள் 3 நோயாளிகளுக்கு வெற்றிகரமாக அகற்றம்
தஞ்சாவூர், ஆகஸ்ட் 22 மூக்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் இருந்து மண்டையோட்டின் அடிப்பகுதி மற்றும் மூளைப்பகுதி வரை பரவியிருந்த அரியவகை கட்டிகளை, நரம்பு மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 3 நோயாளிகளுக்கு அகற்றி, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மருத்துவக் குழுவினர் அரிய மருத்துவ சாதனை படைத்துள்ளனர். அதிநவீன எண்டோஸ்கோபிக் உத்திகள் மற்றும் மண்டையோட்டு வழியாக மேற்கொள்ளப்படும் மைக்ரோஸ்கோபிக் அறுவைசிகிச்சை முறைகளை ஒருங்கிணைத்து, இந்த சிக்கலான அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. மூன்று நோயாளிகளுக்கும், நரம்பியல் மருத்துவக் குழுவினர் மண்டையோட்டு வழியாக மைக்ரோஸ்கோப் உதவியுடன் மூளைப்பகுதியில் இருந்த கட்டிகளையும், மூக்கு வழியாக எண்டோஸ்கோப் மூலம் மற்ற பகுதிகளில் இருந்த கட்டிகளையும் அகற்றினர். கட்டி அகற்றப்பட்ட பின்னர், மூளையையும் மூக்குப் பகுதியையும் பிரிக்கும் மண்டையோட்டின் முன்பகுதி நுணுக்கமாகச் சீரமைக்கப்பட்டது. இதன் மூலம் மூளையைப் பாதுகாப்பதுடன், மூளைத்தண்டுவட நீர் கசிவு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய மூளைக்காய்ச்சல் போன்ற தொற்றுகளும் தடுக்கப்பட்டன. இந்த மூன்று நோயாளிகளுக்கும் மூக்கு மற்றும் மண்டையோட்டின் அடிப்பகுதி இணையும் பகுதியில் அரிய மற்றும் வீரியமிக்க கட்டிகள் கண்டறியப்பட்டன. 50 வயது பெண்ணுக்கு 10 × 10 செ.மீ. அளவிலான ஆல்ஃபாக்டரி எஸ்தீசியோநியூரோபிளாஸ்டோமா கட்டி இருந்தது. இது மூக்கைச் சுற்றியுள்ள பகுதிகள், மண்டையோட்டின் அடிப்பகுதி மற்றும் மூளையின் வலது முன்பகுதி வரை பரவியிருந்தது. 40 வயது ஆணுக்கும் 9 × 7 செ.மீ. அளவிலான இதே வகை கட்டி இருந்தது. 36 வயது பெண்ணுக்கு 12 × 10 செ.மீ. அளவிலான சைனோநேசல் கார்சினோமா கட்டி மூக்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தது. 10 முதல் 15 மணி நேரம் நீடித்த அறுவைசிகிச்சை ஒவ்வொரு அறுவைசிகிச்சையும் தலா 10 முதல் 15 மணி நேரம் வரை நீடித்தது. நரம்பியல் துறையின் மூத்த நிபுணர் டாக்டர் N. அருண்குமார், இணை நிபுணர் டாக்டர் V. ஸ்ரீ பிரியதர்ஷன், காது, மூக்கு, தொண்டை ENT துறையின் மூத்த நிபுணர் டாக்டர் ஐசக் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டனர். மயக்கவியல் துறையின் மூத்த நிபுணர் டாக்டர் G. அரிமாணிக்கம் உறுதுணையாக இருந்தார். அறுவைசிகிச்சையின்போது ரத்தக்கசிவைக் கட்டுப்படுத்தவும், சுற்றியுள்ள திசுக்களைத் தெளிவாகப் பார்த்து கட்டியைத் துல்லியமாக அகற்றவும் CUSA கியூசா அதிநவீன அல்ட்ராசோனிக் அறுவைசிகிச்சை கருவி பயன்படுத்தப்பட்டது. இதுகுறித்து டாக்டர் N. அருண்குமார் கூறுகையில், மூக்கும் மூளையும் இடையிலான குறுகிய பகுதியில் உருவாகும் இந்தக் கட்டிகள் மண்டையோட்டின் அடிப்பகுதி வழியாக மூக்குப் பகுதிக்கும், பின்னர் மூளையை நோக்கியும் பரவக்கூடியவை என்றார். ஒரு லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படக்கூடிய மிகவும் அரிய வகை கட்டிகள் இவை என்றும், மூளை, முக்கிய நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களுக்கு மிக அருகில் இருப்பதால் அறுவைசிகிச்சை மிகவும் சவாலானது என்றும் தெரிவித்தார். மேலும், மண்டையோட்டு அறுவைசிகிச்சைகளில் முக்கிய சவாலாக இருப்பது மூக்கு வழியாக மூளைத்தண்டுவட நீர் கசிவைத் தடுப்பதாகும். இதனால் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட கடுமையான தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், மூன்று நோயாளிகளுக்கும் நீர் கசிவு அல்லது தொற்று ஏற்படாமல் கட்டிகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். நரம்பியல் மற்றும் காது, மூக்கு, தொண்டை மருத்துவக் குழுக்களின் சிறப்பான ஒருங்கிணைப்பும், துல்லியமான மண்டையோட்டுச் சீரமைப்புமே இந்த வெற்றிகரமான சிகிச்சைக்கு முக்கிய காரணம் என்றும் டாக்டர் அருண்குமார் கூறினார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் V. பிரவீன் உடனிருந்தார்.