தஞ்சை கொடிமரத்துமூலை உயர்மட்ட பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வணிகர் சங்க பேரமைப்பு கரந்தை கிளை கூட்டத்தில் தீர்மானம்
தஞ்சாவூர்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில செயற்குழு கூட்டம் ஏலகிரியில் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாநகரங்களில் கிளைச் சங்க கூட்டங்களை சிறப்பாக நடத்த வேண்டும், மாநகரங்களில் புதிய கிளைச் சங்கங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தஞ்சை மாநகரிலும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கிளைச் சங்க கூட்டங்கள் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முதலாவதாக தஞ்சை கரந்தை கிளை கூட்டம் நடைபெற்றது. கரந்தை கிளைத் தலைவர் மணி முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் ரங்கசாமி, கிளைச் செயலாளர் செந்தில்குமார், கிளை பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாநகர செயலாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு தீர்மான விளக்க உரையாற்றினார். கூட்டத்தில், தஞ்சை கொடிமரத்துமூலையில் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக அடுத்தடுத்து அமைந்துள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். கொடிமரத்துமூலை உயர்மட்ட பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கரந்தை அரசு போக்குவரத்துக் கழக புறநகர் கிளையில் சேகரிக்கப்படும் குப்பைகளை வடவாற்றில் கொட்டுவதைத் தடுக்க வேண்டும். ஏற்கனவே ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை சம்பந்தப்பட்டவர்களைக் கொண்டே அகற்ற வேண்டும். மேலும், செல்லியம்மன் கோவில் முகப்பு மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் எதிரே உள்ள சாலையில் அடிக்கடி நடைபெறும் விபத்துகளைத் தடுக்க, அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து தினமும் ஒவ்வொரு பகுதியாக கிளைச் சங்க கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தஞ்சை மாநகரம் முழுவதும் மொத்தம் 40 கிளைச் சங்க கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த கிளைச் சங்க கூட்டங்கள் அனைத்தும் முடிவடைந்த பின்னர், மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் தஞ்சையில் ஒருங்கிணைந்த மாநகரக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் தாமரைச்செல்வன், இளைஞர் அணி ஜெயம் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கரந்தை பகுதி பொறுப்பாளர் பிரபாகரன் நன்றி கூறினார். படவிளக்கம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சை மாநகரம் கரந்தை கிளைச் சங்க கூட்டம் நடைபெற்றது.