போதைப்பொருட்களுக்கு எதிராக ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு! 3 கி.மீ தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த 3 வயது குழந்தை சாஸ்விகா!
தஞ்சாவூர், ஆக.29- தஞ்சையில் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வெறும் 3 வயதே ஆன குழந்தை ரோலர் ஸ்கேட்டிங் செய்து 3 கி.மீ தூரத்தை கடந்து உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். தஞ்சை மகர்நோன்புச்சாவடியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சாலினி. இவர்களது 3 வயது மகள் சாஸ்விகா, தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார். இந்நிலையில், போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சிறுமி சாஸ்விகா ரோலர் ஸ்கேட்டிங் மூலம் சாதனை முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக இன்று காலை தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே இருந்து தனது விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார். போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ரோலர் ஸ்கேட்டிங் செய்தவாறே பயணித்தார். வெறும் 3 வயதிலேயே சாஸ்விகா மொத்தம் 3 கி.மீ தூரத்தை 4 நிமிடங்களில் கடந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்த சாதனை ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்தது. இதனைத் தொடர்ந்து சாதனை படைத்த சிறுமி சாஸ்விகாவுக்கு அதற்கான சான்றிதழை ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவன தலைவர் வெங்கடேசன் வழங்கி பாராட்டினார். உலக சாதனை படைத்த சிறுமி சாஸ்விகாவை அவரது பயிற்சியாளர் மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டி வாழ்த்தி ஊக்கப்படுத்தினர். வெறும் 3 வயதில் சாதனை படைத்து, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு செய்தியை சமூகத்திற்கு கொண்டு சென்ற சிறுமி சாஸ்விகாவின் முயற்சி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.