தஞ்சாவூரில் ஓவிய–சிற்பக் கலைக் கண்காட்சி தொடக்கம்!
தஞ்சாவூர்: தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில், பாரம்பரிய கலைகளை பாதுகாத்து வளர்க்கும் நோக்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையத்தின் சார்பில் ஓவிய மற்றும் சிற்பக் கலைக் கண்காட்சி தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களின் படைப்புகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. கலைஞர்களின் படைப்புகளை சந்தைப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் என ஏராளமானோர் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். விழாவில் பங்கேற்றவர்கள்: இக்கண்காட்சியை தஞ்சாவூர் சாகர் சிறுவர் மன்ற ஓவிய ஆசிரியர் அமுதன் வரவேற்புரையாற்றி தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் இராஜாராமன் விழா நோக்கவுரையாற்றினார். மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.ரேவதி, ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்து தலைமை வகித்தார். தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.விஜயசரவணன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் குணசேகரன், அரசு கவின் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் பா.இராதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் வரதராஜன், ஓவியர் மற்றும் புகைப்படக் கலைஞர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், வல்லம் சாகர் சிறுவர் மன்ற ஓவிய ஆசிரியர் மாதவன் நன்றியுரையாற்றினார். கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கண்காட்சியை பார்வையிட்டு, கலைஞர்களை ஊக்குவிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.