புரட்டாசி திருவோணம் நட்சத்திரம் பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர்:தஞ்சை திருப்பதி என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில், புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி மற்றும் திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று (22-ம் தேதி, செவ்வாய்க்கிழமை) சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், திருப்பாவாடை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. திருவோணம் நட்சத்திர தினத்தில் பெருமாளுக்கு தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை நேரில் சென்று தரிசனம் செய்ய இயலாதவர்கள், தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தால், ஏழுமலையானை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இன்றைய சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பிரசன்ன வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டனர்.