தஞ்சாவூரில் மத்திய அரசின் நலத்திட்ட விழிப்புணர்வு கண்காட்சி மூன்று நாள் முகாம் நாளை தொடக்கம் – பொதுமக்களுக்கு இலவச அனுமதி
தஞ்சாவூர், செப்.8: தஞ்சாவூரில் “வளர்ச்சி அடைந்த பாரதம் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத திட்டம், போதைப் பொருள் ஒழிப்பு பாரத இயக்கம் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள்” குறித்த மூன்று நாள் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பயனாளிகள் பதிவு முகாம் நாளை (செப்.9) தொடங்குகிறது. இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் இந்த முகாம் நடைபெறுகிறது. செப்.9 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும் இம்முகாமில் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த 40-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு பதாகைகள் இடம்பெறுகின்றன. வேளாண்மைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மாவட்ட சமூக நல அலுவலகம், அஞ்சல் துறை, மாவட்ட முன்னோடி வங்கி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் பொது சேவை மையம் உள்ளிட்ட துறைகளின் அரங்குகளும் அமைக்கப்படுகின்றன. இதில் ஆதார் திருத்தம், விவசாயிகளுக்கான தனித்துவ டிஜிட்டல் அடையாள எண் பதிவு, விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்ட பதிவு, மண் வள அட்டை, சொட்டுநீர் பாசனம், விதை மற்றும் உர மானியம், தேசிய வேளாண் சந்தை உள்ளிட்ட சேவைகள் தொடர்பான தகவல்கள் வழங்கப்படும். மேலும், ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவக் காப்பீட்டு அட்டை பதிவு, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ரூ.3,000 பென்ஷன் திட்ட பதிவு மற்றும் இலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சிக்கான விண்ணப்பப் பதிவு உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும். மூன்று நாட்களும் காலை மற்றும் மதியம் என இரண்டு அமர்வுகள் நடைபெறும். ஒவ்வொரு அமர்விலும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு, அரசு துறை அலுவலர்கள் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விளக்கமளிக்க உள்ளனர். தொடர்ந்து மாணவர்களுக்கான கேள்வி–பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பங்கேற்கும் வகையில் விழிப்புணர்வு விளம்பர வாகனமும் தஞ்சாவூரைச் சுற்றி மூன்று நாட்கள் வலம் வர உள்ளது.