தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம் மேயர் அஞ்சுகம் பூபதி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி முன்னிலை வகித்தார். தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அய்யங்குளத்தை உடனடியாக தூர்வார வேண்டும் என்றும், அப்பகுதியில் போதிய விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தடுமாறி விழும் நிலை உள்ளதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர். எனவே, அங்கு கூடுதல் மின்விளக்குகள் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், ஸ்டெம் பூங்காவை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 31-வது வார்டில் மேன்ஹோல் பிரச்சினை தொடர்பாகவும் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டதையடுத்து, குழாய்கள் சீரமைக்கப்பட்ட போதிலும் தற்போது குடிநீர் துர்நாற்றத்துடன் வருவதாக தெரிவித்தனர். இதனை உடனடியாக ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். டெங்கு காய்ச்சல் பரவும் சூழ்நிலையில், பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், புதிதாக அமைக்கப்பட்ட சில சாலைகள் தரமற்ற நிலையில் இருப்பதாகவும், குப்பைகள் காலை நேரத்தில் முறையாக சேகரிக்கப்படாததால் பொதுமக்கள் இரவு நேரங்களில் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டும் நிலை ஏற்படுவதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர். எனவே, தூய்மை பணியாளர்கள் காலை நேரத்திலேயே வீடுகள் மற்றும் பகுதிகளில் இருந்து குப்பைகளை முறையாக சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மழைநீர் வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினர்கள் முன்வைத்தனர்.