Welcome To weekly News Paper Delta
தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் கோலாகலக் கலைவிழா “ஆடுவோமே! பள்ளுப்பாடுவோமே!”
50 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, தமிழ்த்துறை நறுவீ தமிழ்ச்சங்கம் சார்பில் மாபெரும் கோலாகலக் கலைவிழாவான “ஆடுவோமே! பள்ளுப்பாடுவோமே!” நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. காலையில் தொடங்கிய கலைவிழாவில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. கனடா தமிழாழித் தொலைக்காட்சியின் நிறுவனர் தமிழ்மாமணி உயிரவன் மற்றும் மலேசிய தமிழ் இலக்கியக் கழகத்தின் தேசியத் தலைவர் தமிழ்க்கழல் இராமன் ஆகியோர் இணையவழியில் வாழ்த்துரை வழங்கி நிகழ்வினைத் தொடங்கி வைத்தனர். கலைவிழாவின் நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி விக்டோரியா தலைமை வகித்து பேசுகையில், “தமிழும், தமிழர் பண்பாடும் நமது மிகப்பெரிய கருவூலம்” என்று குறிப்பிட்டார். சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநரும், பாடலாசிரியருமான ராசி. மணிவாசகன் கலந்து கொண்டு மாணவர்களின் திறமையை பாராட்டினார். மாணவர்களின் திறன் வியத்தற்குரியதாக இருப்பதாகவும், தமிழின் சிறப்பை உலகிற்கு கொண்டு செல்லும் விதைகளாக மாணவர்கள் திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார். இந்த கலைவிழாவில் 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 280 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் சிறப்பிடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வென்றது. விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் ஆனந்தி, புலத்தலைவர்கள் பெல்லாரமின் டயானா, நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ்த்துறை பேராசிரியர்கள் பிரியா வரவேற்புரையும், செந்தமிழ்செல்வி நன்றியுரையும் வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறைத் தலைவர் சத்தியா மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர்கள், மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

.