தஞ்சை பெரிய கோயிலில் தினசரி அன்னதானம் அரசு கட்டிடங்களை புனரமைத்து அன்னதானக் கூடம் அமைக்க வேண்டும் – எம்எல்ஏ விஜய்சரவணன்
தஞ்சாவூர்: உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தினந்தோறும் அன்னதானத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தஞ்சாவூர் சட்டப்பேரவை உறுப்பினர் இரா. விஜய்சரவணன் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் பேசுகையில், கோயிலில் அன்னதானம் வழங்க தன்னார்வலர்களும் முன்வருகின்றனர். ஆனால், அங்கு ASI கட்டுப்பாடுகள் காரணமாக அனுமதி மறுக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, கோயிலின் பக்கவாட்டுப் பகுதியில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதும், தற்போது அரசு அலுவலகங்களாக செயல்பட்டு வருவதுமான கட்டிடங்களை புனரமைத்து, அவற்றில் அன்னதானக் கூடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் எஸ். ரமேஷ், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் அன்னதான சேவையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார். மேலும், தஞ்சாவூர் பெரிய கோயிலில் அன்னதானம் தொடர்பாக எம்எல்ஏ ஏற்கெனவே கோரிக்கை வைத்துள்ளதாகவும், அது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். கூடிய விரைவில் உரிய அனுமதி பெற்று, தஞ்சாவூர் பெரிய கோயிலில் அன்னதானத் திட்டம் மேலும் சிறப்பாக நடைபெறும் என அமைச்சர் எஸ். ரமேஷ் சட்டப்பேரவையில் உறுதியளித்தார்.