மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு சிறப்பு கட்டுரை
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற செப்டம்பர் 17-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு சிறப்பு கட்டுரை. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் காண வருகை தரும் பக்தர்கள் அனைவரையும் வருக வருக என தஞ்சாவூர் டெல்டா டாக் டைம் இதழ் சார்பில் வரவேற்கிறோம். அனைவரும் வருக! மதுரை மீனாட்சி அம்மன் அருள் பெறுக! சங்ககாலத்தில் மதுரை முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. சுமார் 2000 ஆண்டுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மதுரையில் புகழ்பெற்று விளங்குவது மதுரை மீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் ஆகும். பொதுவாக, “உங்கள் வீட்டில் மதுரையா? சிதம்பரமா?” என பெரியோர்கள் கேட்பது உண்டு. மதுரை என்றால் மதுரையில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் ஆட்சி புரிவது போல் அந்த வீடுகளில் இல்லத்தரசி ஆட்சி என பொருள் கொள்ளலாம். சிதம்பரம் என்றால் இல்லத்தலைவனாகிய கணவன் ஆட்சி என பொருள் கொள்ளலாம். குறிப்பிட்ட சமுதாயத்தில் இன்றளவும் அவர்கள் இல்லங்களில் மீனாட்சி ஆட்சி தான் நடக்கிறது. இதன் காரணமாக அவர்கள் குடும்பத்தில் பொருளாதாரத்தில் உன்னத நிலையில் உள்ளார்கள். உங்கள் வீட்டில் சிதம்பரமா? உடனே மீனாட்சி ஆட்சியாக மாற்றம் செய்து பாருங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இப்போது ஆலயம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தலவரலாறு தமிழகத்தில் தேவாரப் பதிகம் பெற்ற 274 சிவத்தலங்களில் பாண்டிநாட்டு பதினான்கில் திருவாப்பனூர், திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை), திருப்பத்தூர், திருப்பூவணம், திருப்புவனாயில், திருச்சுழியல் (திருக்காளப்பேர், காளையார்கோவில்), திருவிராமேச்சுரம், திருநெல்வேலி, குற்றாலம், திருப்பரங்குன்றம், திருவேடகம் என்னும் பதிமூன்று சிறந்த சிவத்தலங்கள் தன்னைச் சூழ. அவற்றின் நடுநாயகமாக தாமரை மலரின் மொட்டு போல் அமைந்த தலம் மதுரையம்பதி ஆகும். இம்மதுரையம்பதி மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முச்சிறப்பும் ஒருங்கே அமையப் பெற்ற தலமாகும். சொக்கநாதர் என்கிற சுந்தரேஸ்வரர் சுவாமி இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் ஆதியில் சொக்கநாதர், சொக்கலிங்கப் பெருமான் என்னும் பெயர்களால் அழைக்கப்பட்டார். மேலும், இத்தலத்து இறைவனுக்கு சுந்தரரேசுவரர், மீனாட்சி சுந்தரரேசுவரர், சோமசுந்தரர், கல்யாண சுந்தரர், சண்பக சுந்தரர் என்னும் பெயர்களும், அட்டாலைச் சேவகன், அடியார்க்கு நல்லான், அதிரவீசி விளையாடுவான் பெயர்களும், அபிடேகச் சொக்கர், அழகிய சொக்கர், கடம்பவன சொக்கர், புழுகுநெய்ச்சொக்கர், கடம்பவனேசர், கற்பூரச் சொக்கர் முதலிய திருப்பெயர்களும் வழங்கப்படுகின்றன. சங்கப்புலவராக வீற்றிருந்த போது இறையனார், பேராலவாயர் என்னும் பெயர்கள் வழங்கப்பெற்றன. கல்வெட்டுகளில் இப்பெருமான் அழகிய சொக்கநாதர், திருஆலவாய் உடைய நாயனார், மதுரை உடையார், திருவாலவாயுடையார், அதிரவீசி விளையாடுவார், சொக்கநாத சுவாமி, சொக்கநாயக ஈஸ்வர முடையார், திருவாலவாயுடைய தம்பிரனார், மாதேவரழகிய சொக்கநாதரான சுந்தரபாண்டியச் சோழக்கோனார் என்னும் பெயர்களால் குறிக்கப்பெறுகிறார். மீனாட்சி அம்மன் இப்பதியில் அருள்பாலிக்கும் அன்னை அருள்மிகு மீனாட்சியம்மையாவார். அங்கயற்கண்ணியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். இதற்கு மீன் போன்ற கண்ணையுடையவள் என்பது பொருள். மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதுபோலத் தேவியாரும் தம்மைத் தரிசிக்கவரும் அடியார்களை அருட்கண்ணால் நோக்கி ஊழ்வினை போக்கி மகிழ்விக்கிறார். மீன் கண்ணுக்கு இமையில்லாமல் இரவும் பகலும் விழித்துக் கொண்டிருப்பது போலத் தேவியும் கண்ணிமையாமல் உயிர்களை எப்போதும் காத்து வருகிறாள். பச்சைத்தேவி, மரகதவல்லி, தடாதகைப் பிராட்டி, அபிடேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூர வல்லி, குமரித்துறையவள், கோமகள், மாணிக்கவல்லி, மும்முலைத் திருவழுதி மகள் முதலிய திருப்பெயர்களாலும் திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார் என்னும் பெயராலும் அழைக்கப்படுகிறார். மீனாட்சி சுந்தரர் என்பதற்குச் சொல்லும் பொருளுமாய் விளங்குபவர் என்ற பொருளும் உண்டு என்று திருவிளையாடற் புராணம் பகிர்கின்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக (கலெக்டர்) இருந்த ரோஸ் பீட்டர் என்பவருக்கு மதுரை மீனாட்சி அம்மன் சிறுமி வடிவத்தில் அவருக்கு காட்சி கொடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினாள். இதன் காரணமாக அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு விலைமதிப்பற்ற தங்கப் பாதக்குறடுகளை (அங்கவடிகள் அல்லது செருப்புகள்) காணிக்கையாக அளித்தார். இத்தலத்தில் இறைவனும் இறைவியும் செய்த அற்புதங்கள் ஏராளம். இத்தலத்தில் பொற்றாமரைக்குளம், எழுகடல், வைகை, தெப்பக்குளம், புறத்தொட்டி, நின்மாலிய தீர்த்தம், கொண்டாழி, கிருதமலை என்னும் ஏழு தீர்த்தங்கள் அமையப் பெற்றுள்ளன. அவற்றுள் முதன்மையானது சிவகங்கை என்னும் பொற்றாமரைக் குளமாகும். இது ஆதிதீர்த்தம், ஞானதீர்த்தம், முத்திதீர்த்தம், உத்தம தீர்த்தம் என்றும் வழங்கப்படும். இத்தீர்த்தம் இந்திரன் சிவபெருமானை வழிபட பொன்மலர்களை அருளிய சிறப்புடையதாகும். உலகப் பொதுமறையான திருக்குறள் இத்தலத்தில் சங்கப்பலகையில் வைத்து அரங்கேற்றம் பெற்ற சிறப்பை பெற்றது. சிவபெருமான் நாரைக்கு அருளிய வரத்தின்படி இன்றளவும் மீன் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் இல்லாத சிறப்பை உடையது. சிவபெருமான், இந்திரன் பழிதீர்த்தல் முதலிய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை நிகழ்த்தியருளிய அபூர்வமான தலமாகும். இது போன்ற பெருமை மதுரைக்கு மட்டுமே உரியது. மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்கள் மதுரை மாநகரப் பகுதிக்குள்ளேயே பஞ்சபூதங்களை குறிக்கும் ஐந்து தனித்தனி சிவன் கோயில்கள் அமைந்துள்ளன. மதுரையின் பஞ்சபூதத் தலங்கள்: 1. நீர் ஸ்தலம்: செல்லூர் திருவாப்புடையார் கோயில் 2. ஆகாய ஸ்தலம்: சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் (ஆதி சொக்கநாதர் கோயில்) 3. நில ஸ்தலம்: இம்மையில் நன்மை தருவார் கோயில் (மேற்கு மாசி வீதி) 4. நெருப்பு ஸ்தலம்: தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 5. காற்று ஸ்தலம்: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் மதுரை செல்லும் பக்தர்கள் அங்குள்ள பஞ்சபூத தலங்களை தரிசனம் செய்வது சிறப்பாகும். இத்தலத்தில் புகழ்பெற்ற முக்குறுணி விநாயகர் சன்னதி உள்ளது. புகழ்பெற்ற நடராஜர் சன்னதி உள்ளது. இங்கு சிவபெருமான் கால்மாறி ஆடிய தலமாகும். அற்புதமான வெள்ளியம்பலம் சன்னதியில் நடராஜரை காண கண் கோடி வேண்டும். ஆயிரங்கால் மண்டபம் தமிழகத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபமாகும். இது 1569 ஆம் ஆண்டு அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்டது. இதன் நீள அகலம் 76 x 72 மீட்டர் ஆகும். ஆயிரங்கால் மண்டபத்தில் 985 தூண்களும், 15 தூண்களுக்குப் பதிலாக இரண்டு கோவில்களும் உள்ளன. மண்டபத்தின் தூண்களை எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் ஒரே வரிசையில் காட்சி அளிப்பது வியப்பான அமைப்பாகும். மேலும், இந்த மண்டபத்தின் மையத்தில் வீற்றிருக்கும் ஒருவரை மண்டபத்தின் எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் அவரை ஒரு தூணும் மறைக்காத வகையில், சிறந்த கணிதவியல் முறையில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இசைத் தூண்கள் மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 7 இசைத் தூண்கள் உள்ளன. கோயிலின் வடக்கு ஆடி வீதியில் 5 இசைத் தூண்களும், ஆயிரங்கால் மண்டபத்தில் 2 இசைத் தூண்களும் உள்ளன. இந்தத் தூண்களைத் தட்டி நவரோஸ், குறிஞ்சி போன்ற இராகங்களை இசைக்க முடியும் எனச் சொல்லப்படுகின்றது. யாளி சிம்ம யாளியும் கஜ யாளியுமே பல கோயில்களில் காணப்படும். மீனாட்சி அம்மன் கோயிலில் இவற்றோடு சேர்த்து வேறெங்கும் காணாத வகையில் நாய் யாளியும் காணப்படுகிறது. முதலாம் பிரகாரம் அம்மன் கோயில் இரண்டாம் பிரகாரத்தின் முகப்பு மண்டபம் வழியே உள்ளே சென்றால் வருவது மகாமண்டபமாகும். அம்மன் கோயில் முதல்பிரகாரம் இம்மண்டபத்தில் தொடங்கி இதிலேயே முற்று பெறுகிறது. இம்மண்டபத்தையும், முதல் பிரகாரத்தையும் கட்டியவர் மாவலிவாணாதிராயர் ஆவார். கி.பி. 1452-ல் இதனைக் கட்டினார். மகா மண்டபத்தின் மேற்குப்புறம் அர்த்தமண்டபமும், அன்னை மீனாட்சியின் கருவறையும் அமைந்துள்ளன. முதலில் அமைக்கப்பட்டது கருவறையும், அர்த்தமண்டபமும்தான். அதன் பின்னர் அமைக்கப்பட்டதே மகாமண்டபம். இதனை அமைக்கும் போதே கருவறை மற்றும் அர்த்தமண்டபத்தின் பக்கவாட்டிலும், பின்புறமும் இடம்விட்டு அதில் பிரகாரம் இடம்பெறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பிரகாரம் அம்மன் கோயில் கிளிக்கூண்டு மண்டபத்திலிருந்து சுந்தரேஸ்வரர் சுவாமி கோயிலின் இரண்டாம் பிரகாரத்தை அடையலாம். இதன் தென்பகுதியில் நடுக்கட்டு கோபுரத்திற்கு அருகில் சுமார் 8 அடி உயரமுள்ள முக்குறுணி விநாயகர் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. மாரியம்மன் தெப்பக்குளத்தில் கிடைத்ததாகக் கூறப்படும் இவ்விநாயகர் அமர்ந்த நிலையில் உள்ளார். இவரை ஆண்டவிநாயகர் என்றும் அழைப்பர். இரண்டாம் பிரகாரத்தின் மேற்கில் பல இலிங்கங்கள் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன. இவற்றை ஏகாதச லிங்கங்கள் என வழங்குகின்றனர். இப்பிரகாரத்தின் வடமேற்கில் சங்கப்புலவர் திருக்கோயில் உள்ளது. இதில் சங்கப்புலவர்களின் தலைவரான நக்கீரர் முதலாக நாற்பத்தொன்பது கடைச்சங்கப் புலவர்களின் உருவச்சிலைகள் அமைந்துள்ளன. வடக்குப் பிரகாரத்தில் சங்கப்புலவர் உலா மண்டபம் உள்ளது. மேலும், இரண்டாம் பிரகாரத்தில் மட்டும் எட்டுக் கொடிமரங்கள் உள்ளன. இவைதவிர இப்பிரகாரத்தில் மேற்கு கோபுரம், இடபக்குறி கோபுரம், மண்டபநாயகம் எனப்படும் நூற்றுக்கால் மண்டபம் மற்றும் நால்வர் சன்னதி ஆகியவை அமைந்துள்ளன. கும்பாபிஷேகம் தினம் செப்டம்பர் 17-ம் தேதி காலை 7:40 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க விமானங்களுக்கும், ராஜ கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 7:55 மணிக்கு அம்மன் மூலஸ்தானத்திற்கும், காலை 8:10 மணிக்கு சுந்தரேஸ்வரர் மூலஸ்தானத்திற்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. மண்டலாபிஷேக தினங்கள் கும்பாபிஷேகம் தினம் அன்று நேரில் சென்று தரிசிக்க இயலாத பக்தர்கள் செப்டம்பர் 18-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறும் மண்டலாபிஷேக தினங்களில் தரிசனம் செய்தாலும் கும்பாபிஷேகம் தரிசனம் செய்த புண்ணியத்தை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் காண்போம். அருகில் உள்ள புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் மற்றும் பழமுதிர்சோலை முருகன் மற்றும் அழகர் கோயிலுக்கும் சென்று வழிபடுவோம். அனைவரும் வருக! மீனாட்சி அம்மன் அருள் பெறுக! கட்டுரை ஆக்கம் திருவாவடுதுறை கமலா இராஜகோபாலன்