சங்க இலக்கியங்களில் தமிழர் மரபுகள்: மருதுபாண்டியர் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
தஞ்சாவூர்: மருதுபாண்டியர் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் “சங்க இலக்கியங்களில் தமிழர் மரபுகள்” என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெற்றது. மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் செயலர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கொ. மருதுபாண்டியன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் மா. விஜயா மற்றும் கனடா தமிழாழிப் பேரவை தலைவர் மற்றும் காப்பாளர் க. உயிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் ரா. தங்கராஜ், ஆராய்ச்சிப் புலத்தலைவர் கோ. அர்ச்சுனன், கல்விசார் புலத்தலைவர் ல. மதுகிருத்திகா, பன்னாட்டு இணைப்பாளர் கலையாழி தங்க தினேசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரும், முன்னாள் இலக்கியத்துறைத் தலைவருமான பேரா. கு.வெ. பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். சங்க இலக்கியப் பாடல்களில் இடம்பெற்றுள்ள பழமையான இலக்கிய மரபுகள் மற்றும் பண்பாட்டுச் செய்திகளை எளிய நடையில் விளக்கினார். மற்றொரு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தஞ்சை மாநகர மேயர் அஞ்சுகம் பூபதி நூலை வெளியிட்டு உரையாற்றினார்.